கொடநாடு கொலை வழக்கு: ஜெயலலிதா டிரைவர் கனகராஜின் நண்பரிடம் 5 மணி நேரம் விசாரணை: சென்னையில் ஒரே அறையில் வசித்தவர்கள்

ஊட்டி: கொடநாடு வழக்கு தொடர்பாக, சாலை விபத்தில் மர்மமாக உயிரிழந்த கனகராஜின் நண்பரிடம் ஊட்டியில் 5 மணி நேரம் தனிப்படை  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக கனகராஜின் மனைவி, மைத்துனர், அண்ணன் என இதுவரை 42 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கனகராஜின் நண்பரான சென்னையை சேர்ந்த குழந்தைவேலுவிடம் விசாரணை நடந்தது. இதற்காக குழந்தைவேலு ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் நீலகிரி எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பகல் 12 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது. இதில், குழந்தைவேலும் கனகராஜும் சென்னையில் ஒரே அறையில் தங்கி இருந்ததால் அவரைப்பற்றிய பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த வழக்கில் வருகிற  1ம் தேதி வரை புலன் விசாரணை மேற்கொள்ள ஊட்டி நீதிமன்றம் போலீசாருக்கு அவகாசம்  அளித்துள்ளது. அதற்குள் வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

கேரள குற்றவாளிகளிடம் விசாரிப்பதில் புதிய சிக்கல்

கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள்  சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், பிஜின், உதயகுமார், மனோஜ், ஜித்தின் ஜாய்,  ஜம்ஷீர் அலி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  ஆனால் இவர்கள் 8 பேரும் தற்போது கேரளாவில் உள்ளனர். அங்கு கொரோனா  அதிகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பும் மிரட்டுகிறது. எனவே அவர்களை அழைத்து வர முடியாத நிலைக்கு  போலீசார் தள்ளப்பட்டுள்ளனர். சம்மன் அனுப்பிய  போதிலும், அவர்கள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களிடம் விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் 8 பேரிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார்  திட்டமிட்டுள்ளனர். ஜம்சீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை ஊட்டிக்கு  அழைத்து விசாரிக்கவும், மற்ற 6 பேரை கோவையில் வைத்து விசாரிக்கவும்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: