சாதாரண மக்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் மன நல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்க : ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சாதாரண மக்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் மன நல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொலை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவிப்ேபார் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கிட மத்திய சிறைகளில் சிறப்பு மனநல சிகிச்சை குழுவினை அமைக்க வேண்டியது அவசியம். இக்குழு சென்னை மத்திய சிறையில் மட்டுமே உள்ளது. எனவே, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய சிறைகளில் சிறப்பு மன நல சிகிச்சை குழுவினை அமைக்க வேண்டுமென ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை குழுவை மத்திய சிறைகளில் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: 90 மில்லியன் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் மனரீதியான பாதிப்புகளை சந்திக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் முடிவில் 20 சதவீத இந்தியர்கள் மனம் சார்ந்த பிரச்னையால் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.மன நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே பணம் செலவிடப்படுகிறது.ஒவ்வொருவருக்கும் 33 பைசா மட்டுமே செலவிடப்படுகிறது. இது கடந்த 2018-19ல் ஆண்டுக்கு ரூ.2.40 ஆகியுள்ளது. மன நல சிகிச்சை மற்றும் திட்டத்திற்கான நிதியை அதிகளவில் அதிகரிக்க வேண்டும்.

நாடு முழுவதும் 47 மன நல மருத்துவமனைகள் உள்ளன. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 47 மருத்துவமனைகள் என்பது போதுமானதல்ல. நாடு முழுவதும் மன நல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். மன நல சுகாதார சட்டப்படி, மன நல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தில் இருக்க வேண்டும். சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

உலச சுகாதார நிறுவன ஆய்வின் படி, மன நலம் மற்றும் அன அழுத்ததால் அதிகம் பேர் பாதித்துள்ள இந்தியாவில் ஒன்றிய அரசு அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து அரசுகள் உரிய சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றோருக்கு மறுவாழ்வும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் மேற்கோள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: