மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வந்தது நிலக்கரி இன்ஜின் ரயில்: பூக்கள் கொடுத்து ஓட்டுனர்களுக்கு வரவேற்பு

குன்னூர்: நிலக்கரி இன்ஜினுடன் ஊட்டி மலை ரயில் குன்னூர் வந்தது. ரயில் ஓட்டுநர்களை, ரயில்வே ஊழியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். ஊட்டி மலை ரயில் நூறாண்டு பழமை வாய்ந்ததாகும். இதனை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு நிலக்கரியில் இயங்கும் முதல் மலை ரயில் என்ஜின் ரூ.8.7 கோடி மதிப்பீட்டில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. அந்த என்ஜின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அந்த என்ஜினுடன் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இயக்கி இ்ந்த சோதனையை நடத்தினர். அந்த சோதனை வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மலைப்பாதையில் பற்சக்கரங்களை பிடித்தவாறு எவ்வித தடையுமின்றி புதிய இன்ஜினுடன் மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. குன்னூருக்கு ரயில் வந்ததும் இன்ஜின் ஓட்டுநர்களுக்கு ரயில்வே ஊழியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

Related Stories: