விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி

மதுரை: நெல்லையைச் சேர்ந்த குற்றாலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நோய் தொற்றை கட்டுப்படுத்திடும் வகையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 9ம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவி வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அனுமதி மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், அதன்பிறகு, நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: