மொத்த உற்பத்தியில் 80% பணக்கார நாட்டுக்கே போகுது!: 2022 வரை ‘பூஸ்டர்’ குறித்து பேசாதீங்க..!: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனை

ஜெனீவா: உலகளவில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பூசியில் 80 சதவீதம் அளவிற்கு பணக்கார நாடுகளுக்கே செல்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனையுடன் கூறினார்.  உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘ஒவ்வொரு நாடும் அதன் மக்கள் தொகையில் குறைந்தது 40 சதவீதம் அளவிற்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்னரே ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுதல் குறித்து முடிவெடுக்க வேண்டும். அதுவரை பூஸ்டர் தடுப்பூசியை போட அனுமதிக்கக் கூடாது. உலகளவில் பல்வேறு மருந்து நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 5.5 பில்லியன்  தடுப்பூசி டோஸ்களில் சுமார் 80 சதவீதம் பணக்கார நாடுகளுக்கே  சென்றுள்ளது. எனவே, 2022ம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும். உலகின் பல ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்று சேரவில்லை. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது.

சர்வதேச மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின்  கூட்டமைப்பானது மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் கொரோனா வைரஸ்  தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன என்று கேள்விபட்டு திகைத்துப் போனேன்.  தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு  தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி  விநியோகத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை  வழங்கும் உலகளாவிய திட்டமான ‘கோவாக்ஸை’ இயக்கும் சர்வதேச அமைப்புகள், இந்த  ஆண்டு அதன் முந்தைய இலக்கான 2 பில்லியன் டோஸ்களில் இருந்து கிட்டத்தட்ட 30  சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளன’ என்று வேதனையுடன் கூறினார்.  

ஏற்கனவே, பணக்கார நாடுகள் தங்களது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்ட நிலையில், இஸ்ரேல், இங்கிலாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு முடித்துவிட்டு, மூன்றாவது டோஸ் போடுவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: