நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

ஊட்டி: நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:  நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை நோயாகும்‌ நோயை உண்டாக்கும் வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக பெருக்கம் அடைகிறது. நோய் வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால், பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் நோயானது மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல் தலைவலி மயக்கம் சுய நினைவு இழத்தல் மனக்குழப்பம் கோமா மற்றும் மரணம் ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

அறிகுறிகள் தென்பட்ட 24 நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுய நினைவு இழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோய் பாதிப்பை கண்டறிய காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். நிபா வைரஸ் என சந்தேகிக்கப்பட்ட அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டறியலாம். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்தி தொற்று நீக்கம் செய்தல் போன்றவற்றை கையாள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பன்றிகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையின் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-1077, 0423-2450034, 2450035 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: