கம்பம் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சலோ ஜாஸ்தி; விலையோ கம்மி : விவசாயிகள் கவலை

கம்பம்: கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சின்ன வெங்காயம் அமோக விளைச்சல் இருந்தும், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வறட்சியிலும் நல்ல விளைச்சலை தரக்கூடிய பயிர் வெங்காயம். தேனி மாவட்டத்தில் பரவலாக ெவங்காயம் பயிரிடப்படுகிறது. கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுப்பட்டி, கூடலூர், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, என்.டி.பட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் விவசாயம் நடக்கிறது. இந்த பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவமழையால் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. அதிக அளவில் விளைந்ததாலும், ஒரே நேரத்தில் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டதாலும், போதிய விலை இல்லாமல் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த 6மாதங்களாக நூறு ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையான சின்ன வெங்காயம், விலை குறையாமல் கொரோனா நேரத்திலும் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் கீழே மொத்த மார்கெட் விலையாக உள்ளது. இந்த விலைக்கு கூட வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், ‘வெங்காய நாற்று வாங்கிய காசு கூட வரவில்லை. வெங்காயம் அறுவடை செய்வதற்கு கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. கடன் வாங்கி சின்னவெங்காயம் விவசாயம் செய்தோம். விலை இல்லாததால் வாங்கிய கடனை எப்படி கட்டப் போகிறோம். உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் மழையில் நனைந்து அழுகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையக்கூடிய சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு அண்டை மாநிலமான கேரளா வியாபாரிகள் கொரோனா தடை காலம் என்பதால், தமிழகத்திற்கு வருவதில்லை. அதனால், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய சந்தைகளில் உள்ளூரிலேயே வண்டியில் வைத்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம், என்றனர்.

Related Stories: