காயலான் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் செம்மரக்கட்டை கடத்துவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிப்காட், கும்மிடிப்பூண்டி சாலை, சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுப்பேட்டையில் உள்ள காலி மைதானத்தில் பழைய இரும்பு கடையில் போலீசார் அதிரடி சோதனையிட்டனர். அதில் அங்கு வேலை பார்க்கும் ஒருவர் ஏதோ பொருளை மறைத்து வைக்க முயன்றார். அப்போது, போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஆங்காங்கே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த இம்ரான்(22) என்பது தெரியவந்தது. மேலும், பழைய பொருட்களில் செம்மரக்கட்டைகள் மறைக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு செம்மரக்கட்டைகளில் ஒவ்வொரு குறியீடு வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மொத்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு 4 டன். பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து மாதர்பக்கத்தில் உள்ள வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தியதில் இந்த செம்மரக்கடத்தலில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(34), அரியானா மாநிலத்தை சேர்ந்த விஷ்வாந்த்(26) ஆகியோர் என தெரியவந்தது பின்னர் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Related Stories: