நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சளி பரிசோதனை-ரேண்டம் அடிப்படையில் நடந்தது

நாகர்கோவில் : நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ரேண்டம் அடிப்படையில் சளி பரிசோதனை நடைபெற்றது. தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12 வரை திறக்கப்பட்டுள்ளது. 3வது அலை ஏற்படலாம் என்ற அச்சமும் இருப்பதால், ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறந்த நிலையில்,  ஒரு சில மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தமிழக அரசு தொற்றை கண்காணித்து பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தென்பட்டால் உடனடியாக சளி பரிசோதனை செய்யப்படும். தொற்று இருந்தால்  அந்தந்த பள்ளி அல்லது கல்லூரியில் தீவிர சோதனை மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி மாநகர் நல அலுவலர் விஜயசந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ரேண்டம் அடிப்படையில் சோதனை நடத்தினர்.

இந்து கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, வடலிவிளை அரசு உயர் நிலைப்பள்ளி, மேலச் சூரங்குடி அரசு பள்ளி, எஸ்.எல்.பி மற்றும் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் திடீர் சளி பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ரேண்டம் அடிப்படையில், 10 முதல் 15 பேர் வரை சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. சுகாதாரதுறை துணை இயக்குநர் அலுவலகத்தை சேர்ந்த பறக்கும் படையினர்  டிவிடி பள்ளியில் மாணவர்களுக்கு சளி பரிசோதனை நடத்தினர்.

பஸ் நிலையங்களிலும் திடீர் சோதனை

நாகர்கோவில் மாநகர நல அலுவலர் டாக்டர் விஜய சந்திரன் கூறியதாவது: தமிழக அரசு 3வது அலை வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள்,  சுற்றுலா தலங்கள், சந்தைகளில், அவ்வப்போது ரேண்டம் அடிப்படையில் சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.பள்ளிகள் திறந்துள்ள நிலையில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக இருவகையான ஸ்கிரினிங் (கண்காணிப்பு)  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரேண்டம் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் வாரியாக சோதனை செய்வதுடன், காய்ச்சல் அறிகுறி இருந்தால், அந்த பள்ளியில், சுகாதார துறை சிறப்பு குழுவினரும் சளி சோதனை செய்வார்கள். ஒரு வேளை தொற்று கண்டறிப்பட்டதால், சம்மந்தப்பட்ட மாணவரின் அருகில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். மேலும், பாதிப்பை பொறுத்து, அந்த கல்வி நிறுவனங்கள், 3 முதல் 5 நாட்கள் வரை மூடப்படும். இதுவரை குமரியில், மாணவர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் தொற்று கண்டறியப்பட வில்லை. இருப்பினும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம் தொடர்ந்து ரேண்டம் அடிப்படையில் சோதனைகள் தொடரும்  என்றார்.

Related Stories: