பேட்டை பகுதியில் தினமும் தவிக்கும் பொதுமக்கள் மந்த கதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்-ஆம்புலன்ஸ்கள் கூட வரமுடியாத அவலம்

பேட்டை :  நெல்லை பேட்டையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளால் தினமும் அவதிப்படும் மக்கள், விரைந்து முடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். சீர்மிகு மாநகர திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  பொழுதுபோக்கு பூங்காக்கள், பஸ் நிலையங்கள், தெரு விளக்குகள், சாலைகள்,  குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உள் கட்டமைப்புகளை  மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் பாதாளச் சாக்கடை   திட்டம் மற்றும் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக குழி  தோண்டி குழாய் பதிக்கும் பணிகள், பஸ் நிலைய கட்டுமானம்  உள்ளிட்ட பணிகளால்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தினமும் அவதிக்கு  உள்ளாகின்றனர்.

குறிப்பாக பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட குழாய் பதிக்கும்  பணிகளால் மாநகர வீதிகளும், முக்கியச் சாலைகளும் பஞ்சராக்கப்பட்டு  உருக்குலைந்துள்ளன. இதில் தினமும் பயணிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும்  விபத்துக்கு உள்ளாவதோடு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால்  அன்றாட அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டையின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளும், அரியகுளம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கான குழாய் பணிக்கும் பணிகளும் மந்தகதியாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்காக தோண்டப்பட்ட குழிகள் வாரக்கணக்கால் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பணிகளுக்கு செல்வோர் பல்வேறு குறுகிய தெருக்களின் சந்து பொந்துக்கள் வழியாக வசை பாடியவாறே கடந்து செல்கின்றனர். நோயாளிகள், மருத்துவம் மற்றும் பிற தேவைகளை நாடுவோரை அழைத்துச் செல்ல வாகனஓட்டிகள் வர மறுக்கின்றனர்.

பேட்டை ஆசிரியர் காலனி - அண்ணாநகர் செல்லும் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டிய குழிகள் கடந்த 5 தினங்களுக்கு மேலாக முற்றுபெறாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது.  

இதே போல் திருப்பணிகரிசல்குளம் - பழையைபேட்டை இணைப்பு சாலை லாரி முனையம் அருகே பாதாள சாக்கடை பணி தொய்வு காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதை குண்டும் குழியுமாய் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை நிலவுகிறது. அத்துடன் மழைக்காலத்தில் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பணிகள் முடிந்த பகுதியில் உள்ள ரோடுகள் மண்ணால் மூடப்பட்டுள்ள நிலையில் இரு சக்கர வாகனங்கள் கூட பயணிக்க முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

 பொதுவாக எந்தவொரு திட்டத்திற்காகவும் பணிகளை துவக்கும் போது ஆரம்ப கட்டத்தில் தோண்டப்படும் குழிகள், பணி நிறைவடைந்ததும் உடனடியாக மூடுவதோடு ரோலர் இயந்திரம் மூலம் அப்பகுதிகள் சமன் செய்யப்படும். இதனால் போக்குவரத்திற்கு தடைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், நெல்லை மாநகராட்சியில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மாதகணக்கில் நடந்து வருவதாலும், இதற்காக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாததாலும் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.

பேட்டை பகுதியிலும் மந்தகதியில் நடைபெறும் திட்டப்பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து குளறுபடிகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மக்கள், இனியாவது இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனிக்கவனம் செலுத்தி பருவ மழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories: