முதல்வர் அறிவிப்பையொட்டி தூத்துக்குடியில் வஉசி சாலை புதிய பெயர்பலகை-கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி : தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி சாலை  வஉசி. சாலை என்று மாற்றப்பட்டு பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.  கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சாரு ஸ்ரீ முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி  புதிய பெயர் பலகையை திறந்து வைத்து பேசுகையில்:முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சியின்  150வது பிறந்தநாளை முன்னிட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டிற்கு  வ.உ.சி சாலை என்று மாற்றப்படும் என அறிவித்தார்.

வ.உ.சியின் புகழை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு வ.உ.சி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். வஉசி.க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தேச துரோக குற்றத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பெரிய போராட்டத்துக்கு பிறகு 4 ஆண்டுகளுக்குள் சிறையில் இருந்து வெளியே வந்தார். வ.உ.சி ஆங்கிலேயருக்கு  எதிராக 2கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கினார். அவர் வக்கீலாக பணியாற்றிய போது வழக்குகளுக்கு வருபவர்களை தன் வீட்டில் தங்க வைத்து உணவளித்து வழக்கை வென்று கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரது சுதேசி  கப்பல் கம்பெனி லாபம் ஈட்டவில்லை. சிறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தபோது  அவருடைய பொருளாதாரம் மிக நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நேரத்திலும்  தளர்ந்துவிடாமல் அவர் தொடர்ந்து இந்த மண்ணின் விடுதலைக்காக,  மக்களின் உரிமைக்காக போராடினார். தேச விடுதலைக்காக  மட்டுமின்றி  சுய மரியாதைக்காகவும், சமூக மாற்றம், பெண் விடுதலைக்காகவும் அவர் தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய தலைவராக இருந்துள்ளார். பெண்கள் கல்வி பெற வேண்டும், அனைத்து மனிதர்களுக்கும் கேள்வி கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது என்பதனை தான் வாழ்ந்த காலத்தில் தைரியமாக எடுத்து சொன்ன தலைவர் வ.உ.சி. தான் என்றார்.

முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை நேரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் இடம், கைப்பந்து, கூடைப்பந்து விளையாடும் இடம், விளையாட்டு சாதனங்கள் மற்றும் ரூ.1.54 லட்சம் மதிப்பீட்டில் நவீன நிழற்குடை ஆகியவற்றை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

Related Stories: