கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து அடுத்த பீதி நிபா வைரஸ் தாக்கி சிறுவன் பலி: ஒன்றிய சுகாதார குழு விரைந்தது

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் புரட்டிப் போடும் நிலையில், அடுத்த பீதியாக நிபா வைரஸ் உருவெடுத்துள்ளது. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது  சிறுவனுக்கு கடந்த 1ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் நிபா வைரஸ்  அறிகுறிகள் தென்பட்டது. உடனடியாக சிறுவனிடம் இருந்து ரத்த மாதிரி  எடுக்கப்பட்டு புனேயில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். நிபா வைரசுக்கு சிறுவன் இறந்தது கேரளாவில் அடுத்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  திருவனந்தபுரத்தில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கோழிக்கோடு விரைந்துள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குறித்து ஒன்றிய அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்காக தேசிய நோய்  கட்டுப்பாடு மையத்தின் சிறப்பு குழுவை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஏற்கனவே கொரோனா கடும் உச்சத்தில் உள்ள நிலையில், தற்போது  நிபாவுக்கு சிறுவன் பலியான சம்பவம் கேரள அரசுக்கு அடுத்த நெருக்கடியை கொடுத்துள்ளது. நிபா வைரசுக்கு பலியான  சிறுவனின் உடல் கோழிக்கோட்டில் உள்ள பள்ளிவாசல் மைதானத்தில் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவன் வசித்த கோழிக்கோடு,  சாத்தமங்கலம் பகுதியை ஒட்டியுள்ள 3 வார்டுகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன.

* 2 பேருக்கு அறிகுறி

அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பேட்டியில், ‘‘நிபாவை கட்டுப்படுத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் 188 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 2 சுகாதார பணியாளர்களுக்கு அறிகுறிகள் தெரிகின்றன. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரியில் தனி வார்டு திறக்கப்படும்’’ என்றார்.

* கொரோனா உறுதி

பலியான சிறுவனுக்கு  கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 2 நாளுக்கு பிறகு சளி மாதிரி பரிசோதித்த போது கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக  கூறப்படுகிறது.

* வவ்வால் மூலம் நிபா பரவியதா?

சிறுவனுக்கு நிபா எப்படி பரவியது என்பது உறுதி செய்யப்படவில்லை. அவனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறுவன் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில்தான் ஆடுகளை மேய்க்க கொண்டு செல்வது  வழக்கம். அந்த இடங்களில் உள்ள மரங்களில் ஏராளமான வவ்வால்கள் உள்ளன. எனவே வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

Related Stories: