பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் கொண்டாடுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தெற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவினை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் 15.09.2021 காலை 06.00 மணி வரை நீட்டித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  

அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.

தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் மேற்க்கண்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: