உத்திரப்பிரதேசத்தில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்!: 36 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் பெற்றோர்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு 36 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களாக உத்திரப்பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக மதுரா, மயின்புரி, ஃபிரோஸாபாத், விருந்தவன் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஃபிரோஸாபாத் நகரத்தில் மட்டும் 36 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து சஹால் மாவட்ட ஆட்சியர் நவ்நீத் சிங் தெரிவித்ததாவது, ஃபிரோஸாபாத்தில் மட்டும் நோயின் தீவிரத்தால் மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர காய்ச்சல் எதிரொலியாக இதுவரை 36 குழந்தைகள் உயிரிழந்து இருக்கின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட 5 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர் என்று குறிப்பிட்டார். டெங்கு காய்ச்சல் பாதிப்பின் தீவிர அறிகுறிகள் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளதாக கூறும் மருத்துவர்கள், ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுக்கு பின்னரே உத்திரப்பிரதேசத்தில் பரவி வருவது டெங்கு காய்ச்சலா? அல்லது புதுவித கிருமி தொற்றா? என்பது தெரியவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே மதுரா, மயின்புரி, ஃபிரோஸாபாத் ஆகிய பகுதிகளுக்கு உத்திரப்பிரதேச அரசின் சிறப்பு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.

Related Stories: