கலைஞர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வரவில்லை எனில் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார்?

* அதிமுக-காங். வாக்குவாதம்

* பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை:  பாப்பிரெட்டி கோவிந்தசாமி (அதிமுக) பேசியதாவது:அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு  அளிக்கப்பட்டதால்தான்,  ஆண்டுக்கு 435 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடிகிறது. கொள்கை விளக்க புத்தகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில்  படிக்க 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை எடப்பாடி கொண்டு வந்தார் இல்லை. இதற்கு பதில் ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன்  பரிந்துரையின்படி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததாக கொள்கை விளக்க புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்  மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் நீட் தேர்வு கலைஞர் முதல்வராக இருந்தபோது,  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வரவில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது  தான் நீட் வந்தது என்றும் புத்தகத்தில் பதிவிடலாம் என்றால் இதையும் பதிவாக்கி விடலாம்.  2011ல் மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது. அப்போது நீட் தேர்வு அறிவிக்கப்பட்டாலும் திமுக அதை ஏற்கவில்லை. கலைஞர் முதல்வராக இருக்கும்வரை  தமிழகத்தில் நீட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 2016ம் ஆண்டு வரை  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் தமிழகத்தில் நீட் எட்டிப்பார்க்கவில்லை.  எடப்பாடி முதல்வரான பிறகுதான் நீட்  கொண்டுவரப்பட்டது.(அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தனக்கு பேச  வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த  வண்ணம் இருந்தார்.)சபாநாயகர் அப்பாவு: உறுப்பினர் பேசி முடித்தபிறகு உங்களுக்கு பேச அனுமதி அளிக்கிறேன்.

நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன்: காங்கிரஸ் உறுப்பினர் நீட் பற்றி ஏதோ சொல்ல வேண்டும்  என்று கூறுகிறார். (இதையடுத்து விஜயதரணியை பேச  அழைத்தார். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று அவருக்கு பேச அனுமதி கொடுக்கக்கூடாது என்று குரல் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி துணைத்தலைவர் ராஜேஷ்குமார், ‘அதிமுக உறுப்பினர்களை  பார்த்து கையை நீட்டி ஏதோ பேச முயன்றார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள்  அனைவரும் எழுந்து நின்று காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கி ஏதோ தெரிவித்தனர்.  இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.கோவிந்தசாமி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் ஆகும்.அமைச்சர்  மா.சுப்பிரமணியன்: எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று  உரிமை கொண்டாட உண்மையில் அதிமுக உறுப்பினர்கள் கூச்சப்பட வேண்டும். தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அதையும் நமது உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  எடுத்துவந்துவிட்டார்.

வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு ஆரோக்கியமான பிரசாதம்

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பிரசாதத்தை பெற உறுதிசெய்ய BHOG  திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆறு கோயில்களில் செயல்முறைக்கு வந்துள்ளது.

Related Stories: