திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்: மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் கிராமத்தில் கடந்த 1974ம் ஆண்டு முதல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வல்லிபுரம், எலுமிச்சம்பட்டு, ஆனூர், பின்னப்பட்டு, ஈசூர், பூதூர், நீலமங்கலம், தச்சூர், வழுவதூர், காட்டூர், முடையூர் உள்பட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களது மருத்துவ தேவைக்கு இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். ஆனால், ஒரே மருத்துவர் மட்டுமே இருப்பதால், அவர்கள் பல மணிநேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது.

மேலும், இந்த சுகாதார நிலைய கட்டிடம் 50வது ஆண்டை நோக்கி கொண்டு உள்ளது. இந்த பழமையான கட்டிடத்தின் பல பகுதிகள் தொடர்ந்து இடிந்து விழுகிறது. இதனால், மருத்துவர் மற்றும் செவிலியர் வெளியில் தற்காலிகமாக போடப்பட்டுள்ள சிமென்ட் தகடால் வேயப்பட்ட தாழ்வாரத்தில் அமர்ந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது பெய்து வரும் திடீர் மழையால், அந்த தாழ்வாரத்தில் அமர்ந்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மருத்துவர், செவிலியர் உள்பட நோயாளிகளுக்கு தேவையான கழிப்பறை உள்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.

குறிப்பாக, சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் வளாகத்தில் நுழையும் மர்மநபர்கள் சிலர், மது அருந்துவது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், முட்புதர்கள் அடர்ந்து உள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பீதியுடன் உள்ளனர். அதேப்போல், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதியும் இங்கு இல்லை. எனவே, பழமையான மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: