பேராவூரணி அடுத்த நடுவிக்குறிச்சியில் சிதிலமடைந்த உயர் நிலைப்பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்

*மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தல்

பேராவூரணி : பேராவூரணி அருகே நடுவிக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராவூரணி தொகுதி நடுவிக்குறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆரம்ப காலங்களில் 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தற்போது குறைந்த அளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது போதிய ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளி கட்டிடங்கள் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளதாலும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள 6க்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளது. எனவே இடிந்து பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை உடனே எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விருப்பம் இருந்த போதிலும் உரிய கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லாத காரணத்தால் வேறு இடங்களில் சென்று தங்கள் குழந்தைகளை சேர்க்கும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களில் விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகம் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: