ஜெ. பல்கலையை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட 63 எம்எல்ஏக்கள் கைது

சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் வினா, விடை நேரம் முடிந்ததும், விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.

அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை இணைப்பதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை ஒருங்கிணைந்த வகையில் இருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றுவதற்கும் மற்றும் அதற்கிணங்கிய வகையில் கூறப்பட்ட நோக்கத்திற்காக 2013ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டம் மற்றும் 1981ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்யவும், 2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்குறவு செய்யவும் அரசானது முடிவு செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்பழகன் (அதிமுக): அரசின் சட்ட மசோதாவுக்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

சபாநாயகர் அப்பாவு: உறுப்பினரின் கருத்து பதிவு செய்யப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சரின் தீர்மானம் பேரவை முடிவுக்கு விடப்பட்டது. தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது. (இந்த நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கோஷமிட்டனர்)

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். அதை நான் பதிவு செய்து விட்டேன். அமைதியாக உட்காருங்கள். இந்த மசோதா ஆய்வுக்கு வரும்போது உங்கள் கருத்துகளை முழுமையாக பேசுங்கள்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஆரம்ப நிலையிலே இந்த சட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம்.

சபாநாயகர் அப்பாவு: ஆய்வுக்கு எடுக்கும்போது நீங்கள் விரிவாக பேசலாம். அடுத்த நிகழ்வு தொடங்கி விட்டது.

அமைச்சர் எ.வ.வேலு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவை முன்னவராக இருந்தவர். ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்போது கருத்து தெரிவிக்கலாம். ஆய்வுக்கு எடுக்கும்போது தான் அதை பற்றி விரிவாக பேச முடியும். இது உங்களுக்கே தெரியும்.

துரைமுருகன்: உறுப்பினர் அன்பழகன் இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலே எதிர்த்து விட்டார். ஆகையால் அவர்கள் வெளிநடப்பு தான் செய்வார்கள். (அப்போதும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசினர்.)

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் என்ன பேசினாலும் அவை குறிப்பில் ஏறாது.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 63 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஓபிஎஸ் தலைமையில் வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வாலாஜா சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திரும்பி விடப்பட்டன. காவல்துறை இணை ஆணையர் தலைமையிலான போலீசார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வேன்களில் ஏற்றிக்கொண்டு வந்து, திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்களை கொண்டு சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.  தொடர்ந்து மசோதாவை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் மாரிமுத்து, மதிமுக சதன் திருமலைக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர். முன்னதாக பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைதை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: