வெள்ளமடம் அருகே அந்தோணியார் ஆலயத்தில் கொள்ளை முயற்சி: வேளாங்கண்ணி சிலை சேதம்

ஆரல்வாய்மொழி: வெள்ளமடம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்திற்கு உட்பட்ட குருசடியில் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி. அன்னை வேளாங்கண்ணி சிலையில் சேதமடைந்ததால் பரபரப்பு. ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் சகாயநகர் சந்திப்பில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் அந்தோணியார் குருசடி அமைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காலையில் திறக்கப்பட்டு இரவு நேரத்தில் அடைக்கப்பட்டு வருகிறது. குருசடியின் முகப்பில் இடது பக்கத்தில் அன்னை வேளாங்கண்ணி சொரூபமும் வலது பக்கத்தில் தேவசகாயம்பிள்ளை சொரூபமும் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்தோனியார் குருசடிக்கு சென்றபோது வேளாங்கண்ணி சொரூபம் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆலய செயலாளர் சகாய செந்திலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பங்குத்தந்தை சைமனுக்கு தகவல் தெரிவித்தார். பங்குதந்தை வந்து பார்த்போது, கண்ணாடி கூண்டின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்தது, வேளாங்கண்ணியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைகள் இழுக்கப்பட்டு மாலையில் உள்ள பாசிகள் சிதறி கிடந்தன. வேளாங்கண்ணி சொரூபத்தின் கை விரலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆய்வாளர் மீனா மற்றும் உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வேளாங்கண்ணியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலையானது தங்க நிறத்திலான பாசி போடப்பட்டு இருந்ததால் மர்ம நபர் அது தங்கம் என நினைத்து திருட முயன்றிருக்கலாம் என ெதரியவந்தது. மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: