ஆண்டிபட்டி, கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

ஆண்டிபட்டி/கூடலூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் வைகை சாலையில் உள்ள அர்ஜூனா காலனியில் சத்யபாமா, ருக்மணி சமேத ஸ்ரீ நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் கோகுல கண்ணனுக்கு ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை கிருஷ்ணருக்கு புனித கங்கை தீர்த்தத்தில் நீராடி திருமஞ்சனம் சாற்றி, பாசுரம் பாடி சிறப்பு அபிசேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் நந்தகோபால் பாமா, ருக்மணி ஊஞ்சலில் எழுந்தருளி அருள் பாலித்தனர். குழந்தைகள் கிருஷ்ணர், பாமா, ருக்மணி வேடமணிந்து கோவிலை வலம் வந்தனர்.

குரும்பபட்டி:  ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை குரும்பபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீகோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் கிருஷ்ணஜஜெயந்தி விழா நடைபெற்றது. முன்னதாக 48 நாட்கள் விரதம் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடையர்குல கிராம மக்கள் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டு வந்திருந்த புனிதநீர் மற்றும் மலர்களை கொண்டு யாக சாலையில் யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகளிடம் புல்லாங்குழலுடன் வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. விழா முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு:கம்பத்தில் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில் உள்ளது. இங்கு மாடுகளை பொதுமக்கள் வணங்குவார்கள். நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இங்குள்ள பட்டத்து காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் தம்பிரான் கோயிலிலுள்ள கொடிமரத்திற்கு 15 வகையான பூஜைகள் நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள், கோயில் அறங்காவலர்கள் மற்றும் விழா கமிட்டியினர் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள், பொதுமக்கள் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

வருசநாடு:  கடமலைக்குண்டு அருகே, கரட்டுப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சக்கரைபொங்கல், இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம், பஜனை பாடல்கள், கிருஷ்ணன் வேடம் அணிந்த குழந்தைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ரமேஷ், குமரேசன், ஜெகதீஸ், திமுக இளைஞரணி கரட்டுப்பட்டி ஈஸ்வரன், பூசாரிசண்முகம், வனராஜா, கரட்டுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: