பாணாவரம் அருகே கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைவிட்ட நெல்மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்-நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமரசம்

பாணாவரம்: பாணாவரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குப்புகல்மேடு, வெளிதாங்கிபுரம், மோட்டூர், பாலகிருஷ்ணாபுரம், சிறு வளையம், கர்ணாவூர், கல்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்து குவித்து, இரவும், பகலும் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில், நெல்களை தினமும் வெயிலில் உலர்த்தி பராமரித்து, பாதுகாத்து வருகின்றனர். மேலும், கடந்த சில நாட்களாக திடீரென பலத்த மழை பெய்ததால், நெல் மூட்டைகள் மற்றும் குவியல்கள் மழையில் நனைந்து சேதமாகி முளைத்து, பதராக மாறிப்போனது.

மேலும், கடந்த 20ம் தேதி  முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இழுத்து மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், கடந்த ஒரு மாதமாக எடை போடாமல் உள்ள 12 ஆயிரம் நெல் மூட்டைகளை, விரைவாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, பாணாவரம்-நெமிலி சாலையில்  நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது முளைத்து, பதறான  நெல் மணிகளை சாலையில் கொட்டி, நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்யவும்,  நிலையத்தை மீண்டும் திறக்கவும், முழக்கமிட்டனர்.

  இதுகுறித்து தகவலறிந்த,  சோளிங்கர் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் விஜயபாஸ்கர், பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், விஏஓ காளிதாஸ், எஸ்எஸ்ஐ ராஜமுத்து  உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நெமிலி தாசில்தார் சுமதியை தொலைபேசி மூலம் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். தாசில்தார், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் பேசியதில், வரும் 1ம் தேதிக்குள், நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் பாணாவரம்- நெமிலி சாலையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: