வீரகனூரில் நடுரோட்டில் உள்ள மரத்தை அகற்றாமல் தார்சாலை அமைப்பு-அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்து அபாயம்

கெங்கவல்லி : வீரகனூர் அருகே, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, நட்டநடுரோட்டில் உள்ள புளிய மரத்தை அகற்றாமல் தார் சாலை அமைத்ததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வீரகனூர் அருகே ஆத்தூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில், நல்லூர் பாலம் பகுதியில், பெட்ரோல் பங்க் இடது புறமாக, கிழக்கு ராஜாபாளையம் செல்லும் சாலை பிரிவு உள்ளது. இங்கு கடந்த வாரம் புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது.

வாகனங்கள் வந்து திரும்பும் இடத்தில், மிகப்பெரிய புளியமரம் ஒன்று சாலை நடுவில் உள்ளது. இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தாமல், அதை அப்படியே விட்டு விட்டு, மரத்தின் இருபுறமும் தார்சாலை அமைத்துள்ளனர். இதனால், நட்ட நடுரோட்டில் புளியமரம் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகனங்கள், மரத்தில் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் சாலையோரம் மின்விளக்குகளும் இல்லாததால், விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, முறையாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: