ஐ.நா. பொதுச்செயலாளருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!: கொரோனா சவாலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை..!!

நியூயார்க்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் அன்டோனியோ கட்டெரஸ்சை சந்தித்து பேசியுள்ளார். 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் கட்டெரஸ்சை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, துணை தூதர் கே.நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக கடந்த ஜனவரியில் இந்தியா இணைந்த பிறகு, இரு தரப்பினரிடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். 
ஐ.நா. பொதுச்செயலாளர் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள கொரோனா சவால் குறித்தும், சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்துவது, பாரபட்சமின்றி அனைத்து நாடுகளுக்கும் விநியோகிப்பது ஆகியவற்றின் அவசியம்  பற்றி பேசப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் மேற்கொள்ளும் ஜெய்சங்கர், தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசவிருக்கிறார். 

The post ஐ.நா. பொதுச்செயலாளருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!: கொரோனா சவாலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: