திருப்புவனம் அருகே பசியாபுரத்தில் பாரம்பரிய நெல் கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே  கீழடி ஊராட்சி பசியாபுரத்தில் பாரம்பரிய நெல் விதைகள், பனை ஒலை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார். சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. காலப்போக்கில் பல ரகங்கள் அழிந்து போயின. அவற்றை மீட்டெடுக்க விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய பொருட்கள் குறித்த கண்காட்சி நேற்று பசியாபுரத்தில் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பாரம்பரிய நெல் ரகங்களான சிவப்பு புழுங்கல் (குழிவெடிச்சான்) அரிசி, துளசி வாச சீரக சம்பா, கருப்பு கவுணி,  கிச்சலி சம்பா, கருங்குறுவை, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.  இதுதவிர பொம்மீடி வெண்டை, அரைகீரை, பல கிளை சிவப்பு வெண்டை, நாட்டு முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து கண்காட்சியில் பனை மர ஓலைகளில் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். பாரம்பரிய  உரல், உலக்கை, திருகை, அம்மி போன்றவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  இந்நிகழ்ச்சியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி உரலில்  நெல்லை இட்டு உலக்கையால் இடித்து காட்டினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு கம்பு கூழ்,  சுக்கு காபி உள்ளிட்ட இயற்கை உணவு வகைகளே வழங்கப்பட்டது.  மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள் வந்திருந்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு  பாரம்பரிய நெல் ரகங்கள் தலா இரண்டு கிலோ வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் சேதுபதி கூறுகையில், ‘வைகை ஆறு பாயும் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயிகளுக்காக முதன் முறையாக இதுபோன்ற கண்காட்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பாரம்பரிய விவசாயத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும், என்றார்.

Related Stories: