வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் வடதமிழ்நாட்டை ஓட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

அதேபோல் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் இன்றும், நாளையும் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமாரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேனி, அண்ணாசாலை, சேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, அரும்பாக்கம், கோயம்பேடு, ஆழ்வார்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. கிண்டி, அசோக்நகர், தி.நகர், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, குன்றத்தூர், மடிப்பாக்கம், போரூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல். அம்பத்தூர், பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல் பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: