புதுக்கோட்டை காவிரி பாசன பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி விறுவிறுப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்காக தங்கள் வயல்களை உழும் இறுதிக்கட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாரங்களில் காவிரி நீர்ப்பாசனம் நடைபெற்று வருகிறது. இதில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாரங்களில் மட்டும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நாற்று விட்டு நடவு செய்யும் முறை மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர்.

காவிரியில் போதுமான தண்ணீர் வராததாலும், போதுமான அளவு மழை பெய்யாததாலும் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு, பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்டு வந்ததால், கூடுதல் செலவு, குறைந்த மகசூல், களை அகற்றுவதில் கூடுதல் சிரமம் என நேரடி நெல் விதைப்பு முறையில் வருவாய் குறைந்த போதிலும், தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு முறையிலேயே பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த மழையை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன விவசாயிகள் தங்கள் வயல்களில் களைகள் வளர்ந்து விடாமல் இருக்கவும், மண் பொலுபொலுப்புடன் இருக்கவும் தொடர்ந்து புழுதி உழவு செய்தனர். தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்தின் காவிரிப்பாசன ஏரிகளில் சேகரமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் காவிரிப்பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையின் ஈரம் தற்போது இப்பகுதியில் காய்ந்த உழவிற்கு ஏற்ற பக்குவத்திற்கு வந்துள்ளது. வயல்களில் உழவு செய்வதற்கு ஏற்ற பக்குவம் வந்துள்ளதாலும், சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதாலும், இப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் விதைப்பிற்கான இறுதிக்கட்ட உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உழவு செய்த பிறகு மழை பெய்யும் பட்சத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் விதைப்பு செய்ய தயாராக உள்ளனர்.

Related Stories: