புன்னார்குளம் கூண்டு பாலம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி: கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது

அஞ்சுகிராமம்: மயிலாடியை அடுத்த  புன்னார்குளம் கூண்டு பாலம் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் நெடுஞ்சாலை மிக முக்கிய சாலை ஆகும். இந்த சாலையில் தினமும் கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் எப்போதும் இந்தச்சாலை பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் மயிலாடியை அடுத்த புன்னார்குளம் கூண்டு பாலம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதனால் பொதுமக்கள் இந்த வழியே செல்வதற்கு அச்சப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் பணி அமர்த்தப்பட்டு கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாத் தோற்று நோய் பரவல் காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது கொரோனோ தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாலும், ஊரடங்கில் அதிக தளர்வுகளை அரசு அறிவித்திருப்பதாலும் மீண்டும் அந்த பணிகளை துவங்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன் காரணமாக பணிகள் தொடங்கப்பட்டு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் கூண்டு பாலத்தில் 8 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி கூண்டு பாலத்தின் இருபுறமும் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளது. எப்போதும் மின்னி மின்னி எரியும் சிக்னல் ஒளி விளக்குகளும் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது  கூண்டு பாலம் புறக்காவல் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு விழாவை நோக்கி தயாராகிவருகிறது.

Related Stories: