பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெற்றிலை வரத்து அதிகரிப்பு: ஒரு கட்டு ரூ.2,200 வரை விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடக்கும் வெற்றிலை ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமம் மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வெற்றிலை கட்டுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதில், கடந்த ஜூலை மாதத்தில் பல நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால், வெற்றிலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இதனால், சந்தைக்கு உள்ளூர் பகுதியிலிருந்து,  குறைவான வெற்றிலை கட்டுகளே வந்தது. மேலும் அப்போது, விசேஷநாட்கள் இல்லாததால், குறைந்த விலைக்கு வெற்றிலை ஏலம்போனது.

 இம்மாதம் துவக்கத்தில் மழை குறைவாக இருந்ததால், வெற்றிலை அறுவடையில் விவசாயிகள் தீவிரம் ஈடுபட்டனர். இதனால், மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் வெற்றிலை கட்டுகளின் அளவு அதிகமானது. மேலும், கடந்த வாரம் விஷேச நாட்கள் அதிகமாக இருந்ததால், கூடுதல் விலைக்கு வெற்றிலை கட்டு விற்பனையானது.   இந்நிலையில், இன்று நடந்த ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வெற்றிலை கட்டுகள் வரத்து ஓரளவு அதிகமாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. மார்க்கெட்டுக்கு சுமார் 6500 வெற்றிலை கட்டுகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.1800 முதல் ரூ.2200 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: