பழமைக்கு திரும்பும் மக்கள்: தேனியில் உரல், அம்மி விற்பனை அமோகம்

தேனி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் இடி உரல், அம்மி பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், தேனியில் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக மக்களின் சமையல் வாழ்வியலோடு ஒன்றிப்போன அம்மி, உரல் ஆகியவை மிக்சி, கிரைண்டர் வருகைக்குப் பின் பயன்பாடு குறைந்து காணாமல் போனது. அம்மி அரைத்தல், உரலில் மாவு ஆட்டுதல் ஆகிய பழக்கங்களை பெண்கள் கைவிட்டதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுப்பொருள்களை சாப்பிட அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால், தமிழகத்தில் மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை இடித்து கசாயமாக்கி குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெற்றிலைச் சாறு பிழிதல், பச்சிளை அருகம்புல் சாறுபிழிதல் ஆகியவற்றிற்கும் இடி உரல் தேவைப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிறிய இடி உரல், அம்மி ஆகியவற்றை வாங்கி மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தேனி நகரில் மதுரை சாலையில் சிறிய அளவிலான அம்மி, இடி உரல் ஆகியவற்றை  விற்பனை செய்து வருகின்றனர். அம்மிகள் ரூ.100 முதல் ரூ.1,500 வரையும், இடி உரல் ரு.100 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விற்பனையாளர் செல்வத்திடம் கேட்டபோது, ‘கொரோனா நோய்த் தொற்று காலத்திற்கு பிறகு சிறிய அளவிலான அம்மி, உரல் விற்பனை அதிகரித்துள்ளது. நாகர்கோயில் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து மிஷின் மூலம் வடிவமைக்கப்பட்ட அம்மி, உரல்களுக்கு தேனியில் விற்பனையாகி வருகிறது’ என்றார்.

Related Stories: