சகட்டுமேனிக்கு வாயில்களை அமைத்து தனியார் மருத்துவமனை அட்டகாசம் ஆற்காடு சாலையை அடைத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்- வேலூர் மக்களின் மனஉளைச்சலுக்கு எப்போது முற்றுப்புள்ளி?

வேலூர் : ஆற்காடு சாலையில் அடைத்து நிற்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும், சகட்டுமேனிக்கு நுழைவாயில்களை அமைத்து மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் தனியார் மருத்துவமனையின் அராஜக போக்குக்கும் எப்போது முற்றுப்புள்ளி விழும் என்ற கேள்வி வேலூர் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக தலைநகரம் சென்னை, கர்நாடக தலைநகர் பெங்களூரு என இருபெரும் நகரங்களுக்கு இடையே பிரதானமான இடத்தில் அமைந்துள்ள வேலூர் நகருக்கு என்று பாரம்பரிய, வரலாற்று பெருமை நிறைய உண்டு. வேலூர் மாநகரை பொறுத்தவரை தற்போதுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக, வர்த்தக வளாகங்களில் 20 சதவீதம்தான் பார்க்கிங் வசதியுடன் உள்ளன. 80 சதவீத வர்த்தக, வணிக வளாகங்கள் பார்க்கிங் வசதி என்றால் என்ன என்று கேட்கும் நிலைதான். குறிப்பாக பிரபல மருத்துவமனை அமைந்துள்ள ஆற்காடு சாலையில் உள்ள எந்த வணிக வளாகமும் வாகன நிறுத்துமிடத்துடம் இல்லை.

அதேபோல் தனியார் மருத்துவமனையும் தனது மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே மருத்துவமனை எதிரில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தையும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு வாகன நிறுத்தத்தையும் கொண்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் வௌிமாநிலங்களை சேர்ந்தவர்களின் கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பேலஸ் சந்திப்பு தொடங்கி காகிதப்பட்டறை வரை ஆற்காடு சாலையின் இருபுறமும் சகட்டுமேனிக்கு பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இதில் டாக்ஸி, ஆட்டோ ஸ்டேண்டுகளும் அடக்கம்.

ஏற்கனவே ஆற்காடு சாலையின் இருபுறமும் பிளாட்பாரங்களை தாண்டி வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதுபோக சாலையோர வியாபாரிகள் தனி. மேலும் தனியார் மருத்துவமனையும் ஆற்காடு சாலையின் வடபுறம் சகட்டுமேனிக்கு 4 நுழைவு வாயில்களை வைத்துள்ளது. இவற்றின் வழியாக திடீர், திடீரென வேகமாக உள்ளே நுழையும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்களும், அதற்கு வழிவிடுவதற்காக திடீரென சாலைக்கு வந்து கையை மறித்து நிற்கும் மருத்துவமனை செக்யூரிட்டிகளின் அட்டகாசமும் அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

சாதாரணமாக ஆற்காடு சாலையில் பேலஸ் சந்திப்பில் இருந்து காகிதப்பட்டறை  டான்சி வரை செல்ல 2 நிமிட நேரங்களே போதும் என்ற நிலையில், அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதனை அரை மணி நேரத்துக்கும் மேல் ஆக்குகிறது. இதில் ஆட்டோக்களின் அட்டகாசம் வேறு வாகன ஓட்டிகளை வேதனைக்கு ஆளாக்குகிறது.

சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஆட்டோக்கள் திடீரென ‘யூ’ டர்ன் அடிப்பதும், திடீரென நிற்பதும், அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும், தட்டிக்கேட்பவரை தாறுமாறாக ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பதும் தொடர்கிறது.

இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் ஆற்காடு சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளும், நோயாளிகளும், பொதுமக்களும் படும் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இடத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் நிர்வாகமும் எதையும் கண்டுகொள்ளாமல் எங்களுக்கு என்ன? என்ற ரீதியில் செயல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஆற்காடு சாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசுவதுடன், ஆற்காடு சாலையில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், பிளாட்பார கடைகளுக்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் நிரந்தர தடை விதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்காடு சாலையை முழுமையாக மீட்க வேண்டும்

1866ம் ஆண்டு நகராட்சியாக வடிவம் பெற்று 2008ம் ஆண்டு மாநகராட்சியாக 142 ஆண்டுகளுக்கு பின்னர் நிலை உயர்ந்து வேகமாக வளர்ந்து வரும் வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆற்காடு சாலையின் பழைய முழுமையான புளூபிரின்ட் எனப்படும் வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்து அதன்படி அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதுடன், ஆற்காடு சாலை வணிக வளாகங்களுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அதேபோல் தனியார் மருத்துவமனைக்குள் செல்லும் கழிவுநீர் கானாற்றையும் மருத்துவமனையிடம் இருந்து மீட்டெடுத்து அவற்றை ஆற்காடு சாலையின் பிளாட்பாரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் வைக்கின்றனர்.

Related Stories: