திருமுருகன் பூண்டியில் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர யானை, குதிரை சிலைகள்: நாளை தஞ்சை செல்கிறது

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில், 80 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 11 அடி உயர  யானை மற்றும் குதிரை சிலை செதுக்கப்பட்டு, தஞ்சை அருகே உள்ள கோயிலுக்கு  அனுப்பி வைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூரில்  யானைமேல் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் யானை மற்றும் குதிரை சிலையை  பிரதிஷ்டை செய்ய, பக்தர்கள் திட்டமிட்டனர். சிலை செதுக்கும் பணி திருப்பூர்  மாவட்டம், அவிநாசி  திருமுருகன்பூண்டி, ஆறாம் காடு பகுதியில் உள்ள  ஸ்ரீ ஆதி கருவண்ராயர் சிற்பக்கலைக்கூடத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிற்பிகள்  மணிகண்டன், சந்தோஷ்குமார், தினேஷ் ஆகியோர் கடந்த 6 மாதமாக, சிலை  செதுக்கும் பணியை செய்தனர். இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.

யானை மற்றும்  குதிரை சிலைகள் மிக பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. நாளை (28ம் தேதி)  இச்சிலைகள் கோயில் நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.

இது  குறித்து சிற்பி மணிகண்டன் கூறுகையில், ‘‘யானைமேல் அய்யனார் கோயில்  மிகவும் பழமை வாய்ந்தது. தற்போது, இக்கோயில் பல கோடி  ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு யானை மற்றும்  குதிரை சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டி, சிலை செதுக்கும் பணியை எங்கள்  சிற்பக்கலைக்கூடத்துக்கு வழங்கினர்.

இதையடுத்து, 80 டன் எடை கொண்ட ஒரே  கல்லை செதுக்கி சிலைகளாக வடிவமைத்தோம். சிலைகள் சிறப்பான முறையில், மிக  பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே ஒரே கல்லில் 11 அடி  உயரம் கொண்ட யானை மற்றும் குதிரை சிலைகள் வடிவமைக்கப்படுவது இதுவே முதல்  முறை’’ என்றார்.

Related Stories: