வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் 29ம் தேதி நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். செப்.7ம் தேதி ேதர்பவனி நடக்கும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்தாண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் கூறியதாவது: பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆலோசனையின்படி வரும் 29ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

கொடியேற்ற நாளன்று மாலை 4.30 மணிக்கு அன்னையின் புனிதக்கொடி பவனி, தேர்பவனி பேராலய வளாகத்திலேயே நடக்கும். மாலை 5 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனித கொடியேற்றுகிறார். செப்டம்பர் 7ம் தேதி தேர் பவனி நடைபெறும். 8ம் தேதி அன்னை பிறந்தநாள் விழா நடைபெறும். பெருவிழா நாட்களில் காலை 6 மணிக்கு தமிழில் சிறப்பு திருப்பலி, 7 மணி முதல் கிழக்கிந்திய மராத்தி, கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி, ஆண்டுதோறும் நடக்கும் திருச்சடங்குகளும் வழக்கம்போல் நடைபெறும்.

இந்தாண்டு யோசேப்பு ஆண்டாக இருப்பதால் யோசேப்பு மற்றும் ஆரோக்கிய அன்னை ஆகியோரை மையப்படுத்திய சிறப்பு மறையுரை வழங்கப்படும். இந்த பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பேராலய இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் வீடுகளில் இருந்தவாறே கண்டுகளிக்கலாம். மேலும் பாதயாத்திரை வருவதை தவிர்க்க வேண்டும். செப்டம்பர் 8ம் தேதி கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். அதைதொடர்ந்து புனிதக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: