பாணாவரம்- பழையபாளையம் சாலை சீரமைப்பு-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பாணாவரம் :  பாணாவரம்- பழையபாளையம் சாலை சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பாணாவரத்தில் இருந்து பழையபாளையம் வரை உள்ள சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால்,  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளவதாக, கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

 இதன் எதிரொலியாக,  அப்போதைய கூடுதல் கலெக்டர் உமா இப்பகுதியில் சிறுபாலப் பணி நடப்பதால் இன்னும் ஓரிரு வாரங்களில் பணி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் பாணாவரம்- பழையபாளையம் 2 கிலோ மீட்டர் வரை மட்டும் சாலைப்பணி ஜல்லி கற்கள்  கொட்டியதோடு சரி, மேற்கொண்டு பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 20ம் தேதி பொதுமக்கள் படும் துயரம் குறித்து விரிவான செய்தி, படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 மாதமாக கிடப்பில் போடப்பட்ட பாணாவரம்-பழையபாளையம் சாலை பணியை துரிதப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணியை,  முடுக்கி விட்டனர். நீண்ட நாளான சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: