மங்களபுரம் ஊராட்சியில் குளத்தை தூர்வாரிய கிராம மக்கள்-அதிகாரிகள் சமரசம்

நாமகிரிப்பேட்டை : மங்களபுரம் ஊராட்சியில் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்களே ஒன்று சேர்ந்து நேற்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் ஊராட்சி கவுண்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள குளத்தை முறையாக பராமரிக்காததால் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதில்லை.

இந்த குளத்தை தூர்வாரி, மரம் செடிகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் மனு கொடுத்தும், கடந்த ஆட்சியாளர்கள் மராமத்து பணிகள் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து, கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி, நேற்று குளத்தில் இருந்த மரம், செடிகளை சுத்தப்படுத்தும் பணியில் கிராம மக்கள் மேற்கொண்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், பணியை தடுத்து நிறுத்தியதுடன், கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: