இந்தியாவில் பயன்பாட்டை அதிகரிக்க புதிய கொள்கை டிரோன்களுக்கான விண்ணப்பம் கட்டணங்கள் அதிரடி குறைப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் டிரோன்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை எளிமையாக்கி உள்ள ஒன்றிய அரசு, இதன் உரிமத்தை பெறுவதற்கான கட்டணத்தை கணிசமாக குறைத்துள்ளது. இந்தியாவில் டிரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயற்கை பேரிடர் மீட்பு பணிகள், ராணுவ பயன்பாடுகள் உட்பட அனைத்து துறைகளிலும் இது கைகொடுத்து வருகிறது. அதே நேரம், நாச வேலைகளுக்கும் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.  இந்நிலையில், டிரோன்களை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை ஒன்றிய அரசு எளிமைப்படுத்தி இருக்கிறது. ‘டிரோன் விதிகள்- 2021’ என்ற பெயரில் புதிய கொள்கைகளை நேற்று அது வெளியிட்டது. அதன் விவரும் வருமாறு:

*  தனித்துவ அங்கீகார எண், தனித்துவ முன்மாதிரி அடையாள எண், உற்பத்தி சான்றிதழ், பைலட் லைசன்ஸ், அங்கீகாரம் உள்ளிட்ட ஒப்புதல்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது.

* கட்டணத் தொகைகளும் 72 வகைகளில் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* அனைத்து வகை பெரிய டிரோன்களுக்கான லைசென்ஸ் கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்படுகிறது.

* இந்த லைசன்ஸ்சுகள் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

 

* விமான நிலையங்கள் உள்ள பகுதிகளில் (பச்சை மண்டலம்) 400 அடி வரை டிரோன்களை இயக்க விமான அனுமதி தேவையில்லை.

* வர்த்தகம் அல்லாத பயன்பாட்டிற்கான மைக்ரோ டிரோன்கள், நானோ டிரோன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு பைலட் உரிமம் தேவையில்லை.

* இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் டிரோன்களை இயக்க, எவ்வித தடையும் இல்லை.

* பைலட் உரிமங்களை ஆன்லைனில் வழங்கப்படும்.

* நானோ மற்றும் மாதிரி டிரோன்கள் (ஆராய்ச்சி அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை) வகை சான்றிதழிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

* 2021 டிரோன் விதிகளின் கீழ் அதிகபட்ச அபராதம், ஒரு லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், இதர சட்டங்களை மீறுவது தொடர்பான அபராதங்களுக்கு இது பொருந்தாது.

மோடி வரவேற்பு

புதிய டிரோன் விதிமுறைகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டள்ள டிவிட்டர் பதிவில், ‘புதிய டிரோன் விதிமுறைகள், இந்தியாவில் இந்த துறைக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. புதிய நிறுவனங்கள், இத்துறையில் பணியாற்றும் இளம் வயதினருக்கு இது பெரிதும் உதவும். இந்தியாவை டிரோன் மையமாக மாற்றுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்த இது உதவும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: