கொரோனா தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை தொழிலாளியாக மாறுவார்கள் என அச்சம்

புதுடெல்லி: ‘கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது,’ என கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்படும்படி ஒன்றிய அரசை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் சிக்கி ஏராளமான பெற்றோர்கள் இறந்ததால், அவர்களின் பிள்ளைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பால் கடந்தாண்டு மார்ச்சில் இருந்து இதுவரையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் குழந்தைகள், தங்களின் பெற்றோரை இழந்துள்ளனர். 8,161 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.

 92,475 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர்.  ஆந்திராவில்தான் அதிக குழந்தைகள் பாதித்துள்ளனர்,’ என கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,’ என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி நிலவரங்கள் என்ன? தனியார் பள்ளிகள் அவர்களை இடைநிறுத்தம் செய்திருந்தால் அதனை சரி செய்வது எப்படி?,  இதுபோன்ற குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

பெற்றோரை இழந்தை குழந்தைகளை கவனிக்காமலோ அல்லது சரியாக பராமரிக்காமலோ இருந்து விட்டாலோ அவர்கள் தொழிலாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அது மிகவும் வேதனையான ஒன்றாகும். இதை தடுக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்,’ என்று கூறினர். பின்னர், விசாரணையை ஒத்திவைத்தனர்.

பி.எம்.கேர் நிதியில் இருந்து எவ்வளவு வழங்க முடியும்?

நீதிபதிகள் மேலும், ‘‘கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுக்காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, ஒன்றிய அரசின் பி.எம்.கேர் நிதி மூலம் எத்தனை குழந்தைகள் பயனடைந்து உள்ளனர்? அவர்களின் கல்விக்காக பி.எம்.கேர் நிதியில் இருந்து எவ்வளவு தொகை வழங்க முடியும் என்பதை ஒன்றிய அரசிடம் கேட்டு கூறுங்கள்,’ என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு  உத்தரவிட்டனர்.

Related Stories: