பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: பக்தர்கள் நேரில் வரவேண்டாம் என அறிவிப்பு

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49ம் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழாவுடன் முடிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் நேரில் வரவேண்டாம் என்றும், யூடியூப் சேனலில் நிகழ்ச்சிகளை காணலாம் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை கூறியதாவது: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழா ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகள் ஆலயத்தின் உள்ளேயே நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டாம். பாதயாத்திரையாக யாரும் வர வேண்டாம். திருக்கொடி பவனி, நற்கருணை பவனி, தேர்பவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ஆலய வளாகத்திலேயே நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப உள்ளது. பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: