வேலூரின் அடையாளம் பாழான பரிதாபம் மீண்டும் புதர் சூழ்ந்து கழிவுநீரை தாங்கி நிற்கும் பாலாற்றை மீட்டெடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூரில் அடையாளமான பாலாறு இன்று பாழாறாகி புதர்கள் மண்டி கழிவுநீரையும் தாங்கி நிற்கும் அவலத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி விழும் என்ற ஏக்கம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடகத்தின் நந்திதுர்கத்தில் தோற்றுவாய் கண்டு ஆந்திரத்தை கடந்து தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றின் நீளம் ஏறத்தாழ 350 கி.மீ. தமிழகத்தில் மட்டும் இதன் நீளம் 222 கி.மீ. இதன் நீர் வரத்து என்பது மழைக்காலங்களில் மட்டும்தான் என்றாலும் ஒரு காலத்தில் ஆண்டு முழுக்க நீர் ஓடிக் கொண்டிருந்த பெருமை கொண்டது. இத்தகைய பாலாற்று அன்னையை கர்நாடகத்துக்குள் கட்டப்பட்ட பேத்தமங்கலம், ராம்சாகர், விஷ்ணுசாகர் என்ற மூன்று அணைகளும், ஆந்திர எல்லைக்குள் 37 கி.மீ தூரத்துக்குள் கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் தண்ணீரை தடுத்து தாகத்தால் தவிக்க விட்டன. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்தங்களும் இரண்டு மாநிலங்களால் கடைபிடிக்கப்படவில்லை.

இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பாலாறு பாலைவனமாகவே காட்சி தந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு மணல் கொள்ளையர்கள், தோல் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் வேறு பாலாற்றை சூறையாடி பொட்டல் காடாக்கி தங்களின் வல்லாதிக்கத்தை காட்டி கொண்டிருக்கின்றனர். இப்படி உருமாறிப்போன பாலாற்றின் மடியை கடைசியில் உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் பங்குக்கு குப்பை கிடங்குகளாகவும், கழிவுநீரை சேர்க்கும் இடமாகவும் மாற்றிக் கொண்டன.இத்தகைய மோசமான நடவடிக்கைகளால் பாலாறு வாணியம்பாடி தொடங்கி அது வங்கக்கடலில் சங்கமமாகும் சதுரங்கப்பட்டினம் வரை புதர்கள் மண்டியும், கழிவுநீரும், தொழிற்சாலைகளின் கழிவுநீரும் தேங்கி நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையை மாற்றிக் காட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமை வேலூர் என்ற அமைப்பு முயற்சியை மேற்கொண்டது.விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் முயற்சியில் நல்ல உள்ளம் படைத்தவர்களுடன் இணைந்து அந்த அமைப்பு வேலூரில் சேண்பாக்கம் தொடங்கி சத்துவாச்சாரி வரை பாலாற்றில் 5 கி.மீ தூரத்துக்கு ஏறத்தாழ ₹2 கோடி செலவில் புதர்களை அகற்றியும் கழிவுநீர் கலப்பதை தடுத்தும், பாலாற்றின் மடியை சுத்தப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு பாலாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் ஒரு கை ஓசையாகவே மாறிப்போனதால் நின்று போனது.எனவே, வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பசுமை வேலூர் போன்ற தொண்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் இணைந்து பாலாற்றை மீட்டெடுக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: