குத்தகை விட்டு சம்பாதிக்க ரயில்வேயும், ஏர்போர்ட்டும் மோடியின் சொத்துக்களா? மம்தா விளாசல்

கொல்கத்தா: ‘‘குத்தகை விட்டு சம்பாதிக்க இதென்ன பாஜ அல்லது மோடியின் சொத்துக்களா என்ன? இவை தேசத்தின் சொத்துக்கள்’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா காட்டமாக பதிலளித்துள்ளார். மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்திற்கு நேற்று வந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய சொத்துகள் குத்தகைக்கு விடும் ஒன்றிய அரசின் புதிய திட்டம் குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: தேசிய சொத்துகள் குத்தகைக்கு விடும் திட்டம் அதிர்ச்சிகரமான, துரதிஷ்டவசமான முடிவு.

இந்த சொத்துக்களை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். இத்திட்டத்திற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சொத்துக்கள் அனைத்தும் தேசத்திற்கு சொந்தமானது. மோடிக்கோ, பாஜவுக்கோ சொந்தமானது அல்ல. அவர்கள் இஷ்டத்திற்கு தேசத்தின் சொத்துக்களை விற்க முடியாது. இந்த மக்கள் விரோத முடிவை எதிர்த்து நாடே ஒன்றுபட்டு நிற்க வேண்டும். நாட்டின் சொத்துக்களை விற்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு யாரும் வழங்கவில்லை. இத்திட்டத்தை கொண்டு வந்ததற்காக பாஜ வெட்கப்பட வேண்டும். இவ்வாறு மம்தா கூறினார்.

Related Stories: