ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 5-க்குள் தடுப்பூசி: ஒன்றிய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘செப்டம்பர் 5ம் தேதிக்குள் நாட்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும்,’ என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, கடந்தண்டு மார்ச்சில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர், கடந்த அக்டோபரில் பள்ளிகளை திறக்க ஒன்றிய அரசு அனுமதித்தது. பகுதி நேரமாக பள்ளிகள் செயல்பட்ட நிலையில், கடந்த ஏப்ரலில் கொரோனா 2வது அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டன. தற்போது, 2வது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், ஊழியர்களை கொரோனா தாக்கும் அபாயம் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்த மாதம் கூடுதலாக 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 5ம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக, அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.  அதற்கான நடவடிக்கைகளை உடனடி எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 60 கோடி

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து, ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

*கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 37,593 பேர் கொரோனோவால் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.

* புதிதாக 648 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக 2,776 அதிகரித்துள்ளது.

* இதுவரை நாடு முழுவதும் 51 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் மொத்தம் 59.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: