புதிய வாடகை கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு சீல் ?ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு

ஊட்டி :  ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1587 கடைகள் உள்ளன. மளிகை, காய்கறி, துணிக்கடை, இறைச்சி கடைகள் உட்பட பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருகிறது. கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வருகின்றனர். கடந்த  4 ஆண்டுகளுக்கு முன் இந்த மார்க்கெட் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் பல மடங்கு வாடகை கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், இந்த வாடகை கட்டணத்தை செலுத்தாத வியாபாரிகள் பழைய வாடகை கட்டணத்துடன் சிறிதளவு சேர்த்து வாடகை கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் புதிய வாடகை கட்டணத்தை செலுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், அவ்வப்போது வாடகை கட்டணத்தை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சியின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை செலுத்தக் கோரி வியாபாரிகளிடம் கேட்டு வருகிறது. ஆனால், வியாபாரிகள் புதிய கட்டணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், புதிய வாடகை கட்டணத்தை  செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் நகராட்சி கடைகளுக்கு இன்று முதல் சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், இது தொடர்பாக பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத், மார்க்கெட் நிர்வாகிகள் சிலரை அழைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தால், எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த வியாபாரிகள்  மார்க்கெட் வளாகத்தில் திரண்டனர். மேலும் நகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.

அப்போது அங்கு வந்த ஊட்டி நகராட்சி அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டம் ஏதும் நடத்த வேண்டாம். நகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைக்க மாட்டார்கள். வியாபாரிகள் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். எனினும் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைப்பதாக கூறி வருவதால் வியாபாரிகள் அச்சத்துடனே உள்ளனர்.

Related Stories: