மாற்று பாதை அமைக்காமல் பாலம் கட்டும் பணி சாலையை கடந்து செல்ல மக்கள் சிரமம்-மானாமதுரை அருகே அவலம்

மானாமதுரை : மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் மாற்று பாதை அமைக்காமல் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலையை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை சாலையில் இருந்து இக்கிராமத்திற்கு செல்லும் 3.200 கி.மீ தூரமுள்ள சாலையை பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தில் புதிதாக அமைப்பதற்கு ரூ.2 கோடியே 22 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியில் மழை தண்ணீர் கடந்து செல்லும் வகையில் சாலையின் குறுக்கே பல இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன.  பாலங்கள் வேலை நடைபெறும் இடத்தில் மாற்றுப் பாதைகள் அமைக்கப்படாததால் அப்பகுதியை கடந்து செல்ல செய்களத்தூர் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த இடங்களில்  விபத்துகளை தவிர்க்கும்  எச்சரிக்கை அறிவிப்பு  பதாகைகள் வைக்கப்படவில்லை. தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலம் வேலை நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.  பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் இந்த  இடங்களை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது.

இதுகுறித்து செய்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், கடந்த 9 மாதங்களாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் அமைக்கப்படும் இடங்களில் மழைத்தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாதவாறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் பாலம் வேலை நடைபெறும் இடங்களில் மாற்று பாதை இல்லாததால் செய்களத்தூர் கிராம மக்கள் அவர்களாகவே ஒரு வழித்தடத்தை ஏற்படுத்திக்கொண்டு சென்று வருகின்றனர்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பாலம் அமைக்கப்படும் இடங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடையாதவாறு பணிகள் நடக்கிறது. எனவே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்  வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.

Related Stories: