நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசுவதை கேட்காமல் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கிறார் பிரதமர்: இ.பரந்தாமன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் கூட மக்களின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகள் பேசுவதை கேட்பதற்கு பதில், தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கிறார் பிரதமர், என திமுக எம்.எல்.ஏ இ.பரந்தாமன் குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் மக்கள் நாடாளுமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை பெரியமேட்டில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில், எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இ.பரந்தாமன் எம்எல்ஏ பேசியதாவது: நாடாளுமன்றத்தில் சென்று பேசுவதற்கு இன்றைக்கு சூழலும் இல்லை. வாய்ப்பும் இல்லை. அத்தகைய ஜனநாயக நெறிமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஒரு அவையை பற்றி இன்னொரு அவையில் தான் தவறாக பேசக்கூடாதே தவிர மக்கள் மன்றத்தில் பேச எந்தவித தடையும் இல்லை. எனவே, பிரதமர் மோடி தமிழ்நாடு சட்டமன்றத்தை பார்த்தாவது டெல்லியில் நாடாளுமன்றத்தை எப்படி நடத்துவது என்பதை உணர வேண்டும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகாலம் ஆகியும் கூட விளிம்பு நிலை மக்களின் பிரச்னையை நமது நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பில்லை. அன்றைக்கு ஒரு ஜனநாயகம் இருந்தது. ஆனால், இன்று இந்தியாவில் மக்கள் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசுவதை கேட்பதற்கு பதில் பெகாசஸ் செயலி மூலம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடலை பிரதமர் ஒட்டுக்கேட்கிறார். இவ்வாறு பேசினார்.

Related Stories: