30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 18 ஆண்டு காலம் உரிய காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் நிதி இழப்பு: அமைச்சர் பெரியகருப்பன் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசியதாவது: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘அதிமுக ஆட்சி காலத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் அது குறைந்து இருப்பதாகவும்’ தனது கவலையை வெளியிட்டார். அவருக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2020-21ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.21,585.633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2021-22ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.22,737.765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், சென்ற ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் 9.11 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில் தகுதியில்லாதவர்கள் நீக்கம் செய்யும் பணி வருகிற 31ம் தேதி முடிக்கப்பட்டு, நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 89 ஆயிரத்து 887 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற ேவண்டும். இந்திய அரசியலமைப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என்று 3 அமைப்புகள் நிர்வாக பொறுப்பில் இருக்கிறது. ஆனால், மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துகின்ற மாநில தேர்தல் ஆணையம் அந்த தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தாமல், காலம் கடத்தும் காரியத்தை இன்றைய எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் செய்து இருக்கிறார்கள்.

குறிப்பாக எம்ஜிஆர் காலமாக இருந்தாலும், ஜெயலலிதா காலமாக இருந்தாலும், ஏன், இடைப்பட்ட காலங்களில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் காலங்களில் மொத்தமாக சேர்த்து பார்த்தால் 30 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஏறத்தாழ 18 ஆண்டுகாலம் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல், ஒரு ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த காரியத்தை செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலக்கட்டங்களில் தேர்தலை நடத்தாத காரணத்தால் ஒன்றிய அரசிடம் இருந்து சில நிதிகளை பெற  முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை உறுப்பினர்கள் பல்வேறு வகையில் சுட்டி காட்டியிருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பல வகைகளில் கடந்த ஆட்சி காலத்தில் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: