கொள்ளிடம் அருகே 300 ஆண்டு பழமையான கோயில் பனைமரம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 300 ஆண்டுகள் பழமையான கோயில் பனைமரத்தை பக்தர்கள் வணங்கி சென்று வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தொல்காப்பியக்குடி கிராமம் உள்ளது. இங்கு பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிரம்மசக்தி அம்மன் பிள்ளையார், முருகன், ஏழு கன்னிகைகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் தனி சன்னதியில் உள்ளன. இங்கு தனி சன்னிதியாக உள்ள வீரன் சன்னிதிக்கு அருகாமையில் ஒரு பனை மரம் உள்ளது. மிகவும் நீண்டு வளர்ந்து உயர்ந்துள்ள இந்த பனைமரம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மிக உயரமான இந்த பனை மரத்திலிருந்து விழும் பனை மட்டைகள் இதுவரை யார் மீதும் எந்த விலங்குகள் மீதும் விழுந்தது கிடையாது. எந்த வேகமான மற்றும் பலத்த காற்றிலும் இந்த பனை மரம் பாதிக்கவில்லை. பனை மரத்தடியில் வீரன் சன்னதியில் இருந்து வரும் தகர கொட்டகையிலும் இதுவரை இந்த மரத்தின் மட்டைகள் விழுந்தது கிடையாது என்கின்றனர் இப்பகுதி பக்தர்கள்.

இந்தக் கோயிலில் பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். இந்த கோயிலில் உள்ள பிரம்மசக்தி அம்மனுக்கு தலையில் வாடாத பூ இருந்து கொண்டிருக்கும். இரவும் பகலும் 24 மணி நேரமும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். தினந்தோறும் காலை மாலை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து குலதெய்வ வழிபாட்டு பக்தர்களும் மற்றும் இதர பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.அப்போது பனை மரத்துக்கு கீழே உள்ள வீரன் சாமியை வழிபடும் பக்தர்கள், இந்த கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரத்தையும் அண்ணாந்து பார்த்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

Related Stories: