பகலில் எலக்ட்ரீஷியன் வேலை இரவில் வழிப்பறி கொள்ளை: 2 பேர் கைது

பூந்தமல்லி: போரூர் அருகே இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 எலக்ட்ரீஷியன்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கோவூர் அருகே நேற்று முன்தினம் இரவு, ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து பணம், செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அவரை சரமாரியாக தாக்கி, அவரது பர்சை பறிக்க முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அந்த இருவரை பிடிக்க முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட இருவரும் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றனர். வாகன ஓட்டிகளும் விடாமல் அவர்களை விரட்டி சென்றனர். இதனால், அதிவேகமாக சென்ற இருவரும், போரூர் அருகே சாலை வளைவில் சறுக்கி விழுந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போரூர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கெருகம்பாக்கம் லீலாவதி நகரை சேர்ந்த ஹேமந்த் (20), பிரகாஷ் (24) என்பதும், எலக்ட்ரீஷியன் வேலை செய்து வரும் இவர்கள், போதிய வருவாய் இல்லாததால், இரவில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து, வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பைக், செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

Related Stories: