மஞ்சூர் காவல் நிலையத்திற்கு விரைவில் சொந்த கட்டிடம்

மஞ்சூர்: மஞ்சூர் காவல் நிலையத்திற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள காவல் நிலையம் கடந்த 60 ஆண்டுகளாக மின்வாரியத்திற்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்காக, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 4 அறைகளாக பிரிக்கப்பட்டு ஒன்றில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் கைதிகளை அடைத்து வைக்கவும், மற்ற அறைகளில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருக்கைகளுடன் ஆவண பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். இதனால், காவல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாமல் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், தினமும் பல்வேறு வழக்குகளுக்காக ஏராளமானோர் காவல் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இடநெருக்கடி காரணமாக, மஞ்சூர் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கி தரும்படி போலீசார் குந்தா வருவாய்துறையிடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மஞ்சூரில் இருந்து சுமார் 3 கி.மீ துாரம் உள்ள ஓணிகண்டி என்ற இடத்தில் காவல்நிலையம் கட்ட வருவாய்துறையினரால் இடம் காட்டப்பட்டது. ஆனால், ஓணிகண்டி பகுதியானது நகரில் இருந்து ஒதுக்குபுறமாகவும், தொலைதூரமாகவும் உள்ளதால் அது கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் காவல்நிலையம் அமைந்தால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும் என்பதால் இங்கு காவல்நிலைய கட்டிடம் கட்டுவதற்கான துறை ரீதியான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.

சமீபத்தில் மஞ்சூர் காவல்நிலையத்தை பார்வையிட்ட தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் மஞ்சூர் காவல் அதிகாரிகள் மேற்கண்ட கோரிக்கையை முன் வைத்தனர். போலீசாரின் கோரிக்கையை கேட்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மஞ்சூர் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: