படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க ரங்கசாமியிடம் விஜய்சேதுபதி கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேற்று சந்தித்து பேசினார். அப்போது சினிமா சூட்டிங் கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேருடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, பிரபல நடிகர் விஜய் சேதுபதி, பிரபல நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் படத்தின் சூட்டிங் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நடிகர் விஜய் சேதுபதி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது நாளொன்றுக்கு ரூ.28 ஆயிரமாக அதிகரித்து வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் தயாரிப்பு நிறுவனத்தினர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் விஜய் சேதுபதி கோரிக்கை மனு அளித்தார். இதுபற்றி பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Related Stories: