சிங்கப்பூர் மியூசியத்தில் வைக்க திருச்சி இன்ஜீனியர் தயாரித்த ‘உலகின் முதல்’ கேமரா வடிவிலான கார்

திருச்சி: வின்டேஜ் கேமரா மியூசியத்தின் முன் நிறுத்தி வைப்பதற்காக திருச்சி இன்ஜினீயரால் தயாரிக்கப்பட்ட கார் விரைவில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது.உலகம் முழுவதும் டிசைன் புரோடோ டைப்பிங் எனப்படும் துறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. ஒரு பொருள் வடிவில் மாற்றுப்பொருள் தயாரிப்பது தான் இத்துறையின் சிறப்பு. இத்துறையில் பல்ேவறு சாதனங்களை தயாரித்து கோவையை சேர்ந்த இன்ஜினீயர் அசத்தி வருகிறார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயர் தமிழினியன் (33). பிஹெச்டி படித்து வரும் இவர், தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். திருச்சி தீரன்நகரில் ஃபிரிகட் என்ற என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நண்பன் படத்தில் ஹீரோயின் இலியானா ஓட்டி வரும் ஸ்கூட்டரை இவர் தான் வடிவமைத்தார்.

காரைக்காலை சேர்ந்தவர் சிங்கப்பூர் வாழ் தமிழர் ராமநாதன். இவர், சிங்கப்பூரில் வின்டேஜ் கேமரா மியூசியம் நடத்தி வருகிறார். பழமையான கேமிராக்களை தனது மியூசியத்தில் வைத்துள்ளார். பார்வையாளர்களை கவர பல்வேறு யுக்திகளை கையாளும் ராமநாதன், தனது மியூசியத்தின் முன்பு நிறுத்துவதற்காக உலகில் முதன் முதலாக கடந்த 1901ம் ஆண்டு கண்டுபிடித்த வுட்டன் பெல்லோ கேமரா வடிவில் ஒரு கார் தயாரித்து தருமாறு தமிழினியனிடம் கேட்டார். இதைத்தொடர்ந்து கேமரா வடிவில் காரை டிசைன் செய்து தனது நிறுவனம் முன்பு தமிழினியன் நிறுத்தியுள்ளார். கேமிரா வடிவிலான கார் அங்கும் இங்கும் நகர்வதை திருச்சி மக்கள் ஆச்சரித்துடன், வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழினியன் கூறுகையில், ‘நான் இந்த துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். கேமரா வடிவிலான கார் ரூ.5 லட்சத்தில் தயாரிக்கப்பட்டது. உலகில் முதல்முறையாக கண்டுபிடித்த வுட்டன் பெல்லோ கேமரா போல காரை வடிவமைத்துள்ளேன். இதுபோல பல்வேறு சாதனங்களை வடிவமைத்து கொடுத்துள்ளேன். கஸ்டமர் ஐடியா கொடுக்கும் பட்சத்தில் அதுபோன்ற பொருட்களை தயாரித்து கொடுப்பதே எங்கள் நிறுவனத்தின் வேலை. இந்த கார், விரைவில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் உலக கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இந்த மாடல் காரை பதிவு செய்ய மியூசியத்தின் உரிமையாளர் ராமநாதன் விண்ணப்பித்துள்ளார்’ என்றார். உலக புகைப்பட தினமான நேற்று தனது நிறுவனத்தின் முன் புதிய வடிவிலான காரை தமிழினியன் நிறுத்தி வைத்திருந்தது மேலும் சிறப்பை சேர்த்தது.

Related Stories: