பொள்ளாச்சி மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு வாழைத்தார் ஏலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும், ஓணம் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் வாழைத்தார் எடைமூலம் நடக்கும் விற்பனையின் போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும். தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வாழைத்தார் கொண்டு வரப்பட்டு, அவை தரத்திற்கேற்றார் போல் குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த இரண்டு வாரமாக விஷேச நாட்கள் மிகவும் குறைவால், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள் சற்று குறைவான விலைக்கே விற்பனையானது.

நேற்றைய சந்தை நாளின்போது, உள்ளூர் வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து மிகவும் குறைவானது. ஆனால், நாளை (20ம் தேதி) திருமண விஷேசம் மற்றும் 21ம் தேதி ஓணம் பண்டிகை  என அடுத்தடுத்து இருப்பதால், அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில், செவ்வாழைத்தார் ஒரு கிலோ 39க்கும், பூவந்தார் 30க்கும், சாம்ராணி 28க்கும், மோரீஸ் 25க்கும், ரஸ்தாளி 30க்கும், நேந்திரன் ஒரு கிலோ 40க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ 40க்கும் என, கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு  ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: